தண்டனை நிறுத்தம் கேட்டு நிர்மலா தேவி வழக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
மதுரை: பாலியல் ரீதியாக தவறாக நடக்க சில மாணவியரை துாண்டிய வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை நிறுத்தி வைத்து, ஜாமின் அனுமதிக்க பேராசிரியை நிர்மலா தேவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஒரு கல்லுாரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலாதேவி. இவர், 'பெரிய பொறுப்பிலுள்ள சிலருடன் அனுசரணையாக நடந்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்,' என ஒரு மாணவியிடம் அலைபேசியில் பேசிய ஆடியோ பதிவு வெளியானது. பாலியல் ரீதியாக தவறாக நடக்க சில மாணவியரை துாண்டியதாக 2018ல் அருப்புக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றம் 2024 ஏப்.,29ல் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து அவர், 'கீழமை நீதிமன்றம் சாட்சிகளை மதிப்பீடு செய்து விசாரிக்கத் தவறிவிட்டது. எனக்கு எதிராக ஆதாரம் இல்லை. வார இதழ் செய்தி அடிப்படையில் விசாரிக்கப்பட்டது. கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. அவர்,தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் அனுமதித்து உத்தரவிட வேண்டும்,' என இடையீட்டு மனு தாக்கல் செய்தார். நீதிபதி எஸ்.கார்த்திகேயன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜெகதீஷ் பாண்டியன் ஆஜரானார். நீதிபதி விசாரணையை செப்.,21 க்கு ஒத்திவைத்தார்.