Lifestyle and human interest
டூ - வீலரில் வேகமாக சென்றதை தட்டி கேட்டவர்களின் வீடுகள் சூறை 3 சிறுவர்கள் கைது; 6 பேருக்கு வலை

மானாமதுரை: டூ - வீலரில் அதிவேகமாக சென்றவர்களை, தட்டி கேட்டவர்களின் வீடுகள், வாகனங்கள் கம்பியால் அடித்து உடைக்கப்பட்டன. இது சம்பந்தமாக, மூன்று சிறுவர்களை கைது செய்த போலீசார், ஆறு பேரை தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, ரயில்வே காலனி, ஆதனுார் சாலை வழியாக, நேற்று முன்தினம், மூன்றுக்கும் மேற்பட்டோர், டூ - வீலர்களில் அதிவேகமாகவும், மற்றவர்களின் வாகனங்களின் மீது மோதுவது போலவும் செ ன்றனர்.
இதை, அப்பகுதி மக்கள் கண்டித்ததால், ஆத்திரமடைந்த அந்த கும்பல், நேற்று நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல் கிருஷ்ணராஜபுரம், ஆதனுார் சாலையில் உள்ள வீடுகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த, இரண்டு கார்கள், ஒரு வேன், இரண்டு ஆட்டோக்கள், மூன்று பைக்குகளை கம்பியால் அடித்து உடைத்தனர். பின், அப்பகுதியில் உள்ள வீடுகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள், ஆதனுார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., லோகநாதன், போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.
இந்த சம்பவத்தில், மூன்று சிறு வர்களை கைது செய்த போலீசார், மேலும், ஆறு பேரை தேடி வருகின்றனர்.