Politics
குப்பையை தரம் பிரித்து தாருங்கள் வடலூர் நகராட்சி வேண்டுகோள்
வடலூர்: குப்பையை தரம் பிரித்து வழங்குமாறு வடலூர் நகராட்சி கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடலுார் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளையும் துாய்மையான, பசுமையான மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்கும் நோக்கில், தமிழக அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக வரும் 1ம் தேதி முதல் நகர மக்கள் மற்றும் வணிகள்கள் ் திடக்கழிவுகளை கட்டாயமாக மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
சமையலறை கழிவுகள், காய்கறி, பழங்கள், தேயிலை தூள், முட்டை ஓடு, பூ, இலை மற்றும், இறைச்சிக் கழிவு போன்ற மக்கும் குப்பையை பச்சை நிற தொட்டியில் போட வேண்டும். பிளாஸ்டிக், உலோகங்கள், தோல், ரப்பர், கண்ணாடி பொருட்கள் போன்ற உலர் மற்றும், மக்காத கழிவுகளை நீல நிற தொட்டியில் சேகரிக்க வேண்டும்.
மின்னணு கழிவுகள், காலாவதியான மருந்துகள், பேட்டரிகள், பல்புகள், பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில், ஊசி, டயப்பர், நாப்கின் மற்றும், சானிட்டரி பேடுகளை கவரில் தனியாக மடித்து தர வேண்டும்.
குப்பையை தரம் பிரிக்காமல் வழங்கினால் துாய்மை பணியாளர்கள் அதை வாங்க மாட்டார்கள். வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் முன் பகுதியில் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்கு கட்டாயம், 2 வண்ண குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும். கடைகளின் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
அக்டோபர் 1ம் தேதி முதல் கழிவுகளை தரம் பிரித்து வழங்காதவர்கள் மற்றும், விதியை மீறுபவர்கள் மீது நகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

