Politics
டயலாக் 2.0!

(டயலாக் பகுதியில் இடம்பெறும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு தலா ரூ.250 பரிசளிக்கப்படும்)
சென்னை வீட்டுக்குள் மனைவியும் கணவனும்...
``ஏங்க... அஞ்சாறு நாளா காலை 9 மணியானா கையெல்லாம் உதற ஆரம்பிக்குதுங்க...’’
``காலையிலயேவா... எனக்கெல்லாம் ஈவினிங் ஆறு மணியானாத்தான் உதறும்...’’
``நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமில்லை. சட்டசபை நேரலை பார்க்காம ஒரு மாதிரி இருக்கு. அதைத்தான் நான் அப்படிச் சொன்னேன்...’’
தாராபுரம் கடைத்தெருவில் மனைவியும் கணவனும்...
``1,500 ரூபாய்க்கு செருப்பு வாங்கிக் குடுத்து அஞ்சு மாசம்கூட ஆகலை... அதுக்குள்ள மாத்தணும்னு வந்து நிக்கிறே...’’
``ஏங்க... நம்ம தொகுதியில அஞ்சு மாசத்துக்கு முன்னாடி அ.தி.மு.க வேட்பாளரா நின்னவங்க இப்போ இடைத்தேர்தல்ல த.வெ.க வேட்பாளரா மாறிட்டங்க. வேட்பாளரே அசால்ட்டா மாறும்போது, செருப்பை மாத்தணும்னு சொன்னதுக்கு ஏன் இந்த குதி குதிக்கிறீங்க!’’
காரைக்குடி கல்லுக்கட்டி கடைத்தெருவில் இரு பெண்கள்...
``ஏண்டி, உன் பொண்ணு அடிக்கடி புருஷன்கூட சண்டை போட்டுட்டு உங்க வீட்டுக்கே வந்துடறா...’’
``ஆமாக்கா, என்ன பண்றதுன்னே தெரியலை...’’
`` `இத்தனை காலமா அடிச்சுகிட்ட அஜித், விஜய் ரசிகர்களே ஒண்ணா சேர்த்துட்டாங்க. பழசையெல்லாம் மறந்துட்டு நீயும் ஒண்ணா வாழக் கத்துக்கோன்’னு சொல்லி அனுப்பிவை!’’
``இதையும் சொல்லிப் பார்த்துட்டேன்... `இத்தனை காலமா ஒண்ணு மண்ணா இருந்த தி.மு.க - வி.சி.க இப்ப சண்டை போட்டுக்கலையா?’ன்னு பதில் கேள்வி கேக்குறாக்கா!”
தாம்பரம் காய்கறி மார்க்கெட்டில் இரண்டு தோழிகள்...
``என்னடி நீ... எப்ப வீடு மாறினாலும், ரெண்டாவது, மூணாவது மாடிக்கே போறியே... அதுவும் லிஃப்ட் இல்லாத வீடா பார்த்து குடியேறுற... உன்னைப் பார்க்க வரவே யோசனையா இருக்கு..!’’
``அதனாலதான்டி..!’’
ஆசிரியர், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.
dialogue@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!
