ஸ்ட்ராபெர்ரியில் தேநீர்... இயற்கை விவசாய சுற்றுலாவில் வருமானம்... அசத்தும் IIM பட்டதாரி இளைஞர்..!

கடந்த 20 ஆண்டுகளாக சிக்மா எஸ்டேட் என்ற பெயரில் இயற்கை விவசாயம் செய்து வரும் இவர் 20 ஏக்கர் பரப்பளவில் தேயிலை, ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி, காய்கறிகள் மற்றும் பழ வகைகளை இயற்கை முறையில் பயிரிட்டு வருகிறார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கண்ணேரி முக்கு பகுதியில் வசித்து வருபவர் குமரகுரு. இவர் கோவை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டாலும் இங்கு சுமார் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். சிக்மா எஸ்டேட் என்ற பெயரில் இயற்கை விவசாயத்தையும் மேற்கொண்டு வருகிறார்.
கோத்தகிரி நகரப் பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இவர்களது சிக்மா எஸ்டேட். இங்கு இயற்கையான முறையில் தேயிலை, ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி, அவரை, முட்டைகோஸ், பீட்ரூட், அவகோடா, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, கொய்யா மற்றும் பல்வேறு பொருட்கள் விளைவிக்கப்படுகிறது.
பட்டப்படிப்பு முடித்து தனியார் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் இதனை மேற்கொண்டு வருகிறார் குமரகுரு. முட்புதர்களாக இருந்த சுமார் 20 ஏக்கர் இடத்தை விலைக்கு வாங்கி அந்த இடத்தில் தேயிலை தோட்டங்கள் மற்றும் காய்கறி பயிர்களை பயிர் செய்து வருகிறார்.
