ஆனயிறங்கல் அணையில் நடமாடும் யானைகள்

மூணாறு:ஆனயிறங்கல் அணையில் சுற்றுலா படகுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட பிறகு காட்டு யானைகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றன.
இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகே மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆனயிறங்கல் அணை முக்கிய சுற்றுலா பகுதியாக திகழ்ந்தது. அங்கு மின்வாரியத்தின் ஹைடல் டூரிசம் சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டன. அணையை சுற்றியுள்ள வனங்களில் காட்டு யானைகள் அதிகம் உள்ளன. அவை சுற்றுலா படகுகளின் சப்தத்தால் பாதிக்கப்படுவதாக, அப்பகுதியில் சுற்றித்திரிந்த உயிர் கொல்லியான அரிசி கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது தொடர்பாக அரசு நியமித்த நிபுணர் குழு கேரள உயர் நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதன்படி ஆனயிறங்கல் அணையில் சுற்றுலா படகுகளுக்கு கேரள உயர் நீதிமன்றம் 2023 ஜூலையில் தடை விதித்தது. அதனால் சுற்றுலா பெரிதும் பாதிக்கப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது வரை ஆனயிறங்கல் அணையில் சுற்றுலா படகுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தெரியாமல் ஏராளமான பயணிகள் படகு சவாரிக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
அதேசமயம் ஆனயிறங்கல் அணை பகுதி நிசப்தமாக உள்ளதால் காட்டு யானைகள் பகல், இரவு நேரங்களில் சுதந்திரமாக நடமாடி வருகின்றன.