கல்வார்பட்டி செக் போஸ்ட்டில் கண்காணிப்பு தேவை: இரவு பகலாக வண்டல் மண் கடத்தல்

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள கல்வார்பட்டி செக் போஸ்ட் செயல்படாத நிலையில் இரவு பகலாக டிப்பர் லாரிகளில் வண்டல் மண் கடத்துவது தொடர்கிறது. மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் - கரூர் நெடுஞ்சாலையில் மாவட்ட எல்லையில் கல்வார்பட்டி ரங்கமலை கணவாய் பகுதி உள்ளது. இங்கு கூம்பூர் போலீசார் சார்பில் செக்போஸ்ட் அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணி நடந்தது.
குறிப்பாக சமீபத்திய தேர்தலின் போது இந்த செக் போஸ்ட்டில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் குற்றச்செயல்கள் நிகழாத படி தடுக்கப்பட்டன. அதன்பிறகு கடந்த மூன்று மாதங்களாக செக்போஸ்ட் பூட்டியே கிடக்கிறது. இதனால் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அச்சம் விடுபட்டுள்ளது.
இந்நிலையில் கல்வார்பட்டி - கோலார்பட்டி ரோட்டின் வழியாக இரவு பகலாக டிப்பர் லாரிகளில் வண்டல் மண் கடத்தி செல்லப்படுகிறது. இந்த செக் போஸ்ட்டை கடந்து தான் கடத்தல் லாரிகள் கரூர் நோக்கி செல்கின்றன. மற்ற பகுதிகளில் மண் கடத்தும் வாகனங்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இப்பகுதியில் மண் கடத்துவது தங்கு தடையின்றி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதனை தடுக்க கல்வார்பட்டி செக் போஸ்டில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட காவல் துறை உத்தரவிட வேண்டும். வருவாய்த்துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வண்டல் மண் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.