Politics
வெடிமருந்து தயாரித்த போது திடீர் வெடிவிபத்து: வீடு தரைமட்டம் இரு சிறுமிகள் படுகாயம்

தென்காசி: தென்காசி ஆசாத் நகரில் வீட்டில் வெடிமருந்து தயாரித்த போது ஏற்பட்ட திடீர் விபத்தில் வீடு தரைமட்டமானது. இரு சிறுமிகள் படுகாயமடைந்தனர். ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஆசாத் நகரைச் சேர்ந்த சுடலை கோயில் கொடை விழாக்களில் வாணவேடிக்கைக்காக பயன்படுத்தப்படும் வெடிகளை தயாரித்து வந்தார். இதற்காக அவரது வீட்டில் அனுமதியின்றி வெடிமருந்து தயாரிக்கப்பட்டது. நேற்று மதியம் 1:00 மணியளவில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் திடீரென வெடித்தன. இதில் வீடு இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் அருகில் உள்ள வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் பொருட்களும் சேதமடைந்தன. அக்கம்பக்கத்தைச் சேர்ந்த மேலும் 4 பேர் காயமடைந்தனர். வீட்டில் இருந்த தங்கம் என்பவரின் மகள்கள் சவுந்தர்யா 13, கிருத்திகா 7, ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். தங்கம் அப்போது வீட்டின் வெளிப்பகுதியில் நின்றதால் தப்பினார்.
குற்றாலம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், காயமடைந்த சிறுமிகளை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் கிருத்திகாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் சிதறிக் கிடந்த பொருட்கள் மற்றும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.