ராமேஸ்வரத்தில் ருசியான வாவல் மீன் வரத்து: மீனவர்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் வலையில் ருசியான வாவல் மீன் அதிகமாக சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செப்., 12ல் ராமேஸ்வரத்தில் இருந்து 360 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
இவர்கள் வழக்கம் போல் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை ராமேஸ்வரம் கரை திரும்பினார்கள். இதில் பெரும்பாலான படகுகளில் சில்வர் பிஸ் எனும் வாவல் மீன்கள் ஏராளமாக சிக்கின.
ருசி மிகுந்த இம்மீனை கிலோ ரூ. 450 (ஒரு மீன் 200 கிராமுக்கு மேலிருக்கும்), ரூ.850க்கு (ஒரு மீன் 500 கிராமுக்கு மேலிருக்கும்) வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினார்கள்.
இலங்கை கடற்படையினர் கெடுபிடியால் சில மாதங்களாக மீன்வரத்து இன்றி தொழில் நஷ்டம் அடைந்த மீனவர்களுக்கு, சில வாரங்களாக வாவல் மீன்வரத்து அதிகரித்து இருப்பதும், மீனுக்கு உரிய விலை கிடைப்பதும் மீனவர்களை மகிழ்ச்சியுறச் செய்துள்ளது.
இந்த மீன்களை ஐஸ்சில் பதப்படுத்தி ஜப்பான், சிங்கப்பூர், கொரியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் வியாபாரிகள் அதிகளவில் ஏற்றுமதி செய்கின்றனர்.