Lifestyle and human interest
சாக்கடை மீது குடிநீர் விநியோக குழாய் எம்.நடுப்பட்டியில் தொடரும் சுகாதாரக்கேடு

கன்னிவாடி: எம்.நடுப்பட்டியில் சாக்கடை மீது தாழ்வான நிலையில் குடிநீர் விநியோக குழாய் அமைத்துள்ளதால் சுகாதாரக்கேடான சூழல் நீடிக்கிறது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் மாங்கரை ஊராட்சியில் நெட்டியபட்டி, எம்.நடுப்பட்டி, மாங்கரை, கொட்டாரபட்டி உட்பட 8க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு வணிக நிறுவனங்கள், அதிக வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் உள்ள மெயின் ரோட்டில் தெருக்குழாய்கள் உள்ளன.
பல குக்கிராமங்களில் தெருக்குழாயில் இருந்து வெளிவரும் கழிவுநீர் செல்ல போதிய கால்வாய் வசதி இல்லை. சில தெருக்களில் கால்வாய் இருந்தும் பராமரிப்பின்றி தேங்கியுள்ள கழிவுகளால் அசுத்தநீர் கடந்து செல்வதில் தடை ஏற்படுகிறது.
சில கிராமங்களில் சாக்கடை மீது தாழ்வான நிலையில் குடிநீர் விநியோகம் நடக்கிறது. தெருக்குழாயை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. சுற்றியுள்ள அசுத்த நீர், தேங்கும் கழிவுகளால் தொற்றுநோய், துர்நாற்றம் என சுகாதார பாதிப்பு நீடிக்கிறது.
இப்பகுதியினர் கூறுகையில், 'ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. போதிய தண்ணீர் கிடைக்காமல் பிற உபயோகங்களுக்கு விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. சுகாதார நடவடிக்கைகளில் ஊராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக மெத்தனம் காட்டுவதால் பலர் பாதித்துள்ளனர்' என்றனர்.