இணையத்தில் அதிகரித்த இனவெறிப் பேச்சு.. இந்தியர்களுக்கு எதிரான அவதூறுகளுக்கு சிங்கப்பூர் பிரதமர் கண்டனம்

பொருளாதாரத்தை உயர்த்த வெளிநாட்டவரை சார்ந்திருக்கும் சிங்கப்பூரில், இனவெறிப் பேச்சுகள் நல்லிணக்கத்திற்கு சவாலாக உருவெடுத்துள்ளன.
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினருக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட இனம் மற்றும் அந்நியர் வெறுப்பு (Xenophobic) கருத்துக்கள் குறித்து அந்நாட்டு காவல் துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த அவதூறான கருத்துக்களுக்குச் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சர் கே. சண்முகம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான ஒன்பது சிங்கப்பூர்வாசிகளில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குறித்த செய்திகளின் கீழ், அவர்கள் "நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல" என்றும், இந்தியர்களைக் குறிக்கும் "ABNN" மற்றும் "CECA faces" போன்ற இழிவான இனவெறிச் சொற்களைப் பயன்படுத்தியும் சில நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டிருந்தனர்.
மேலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தில் மேற்கொண்டுள்ள முதலீடு மற்றும் மூலதன நிதியுதவி தொடர்பான செய்திகளில், டெமாசெக் (Temasek) நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தில்ஹான் பிள்ளை சாந்திரசேகராவைக் குறிவைத்து, அவர் தனது இனத்தின் காரணமாகவே ஏர் இந்தியாவுக்கு சாதகமாகச் செயல்படுகிறார் எனத் தனிப்பட்ட முறையில் இணையவழி தாக்குதல்கள் (Cyberbullying) நடத்தப்பட்டன.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய மூத்த அமைச்சர் கே. சண்முகம், இதுபோன்ற கருத்துக்கள் மிகவும் அருவருப்பானவை, வெட்கக்கேடானவை மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கூறி, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது காவல் துறை விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
பிரதமர் லாரன்ஸ் வோங் தனது முகநூல் பதிவில், "எந்தவொரு சமூகத்திற்கும் எதிரான பாரபட்சங்களையோ அல்லது இனவெறியையோ நமது நாட்டில் சாதாரணமாக மாற அனுமதிக்க முடியாது. இதுபோன்ற வெறுப்புப் பேச்சுகள் தொடர்ந்தால், அது சமூகங்களுக்கு இடையே சீர்குலைவை ஏற்படுத்திப் பிரிவினையை உண்டாக்கும்" என்று எச்சரித்துள்ளார். சிங்கப்பூர் மக்கள் இத்தகைய வெறுப்புக் கருத்துக்களைப் புறக்கணித்து, நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 75% சீனர்களும், 15% மலேசியர்களும், 9% இந்தியர்களும் உள்ளனர். பிறப்ப விகிதம் குறைந்து வரும் நிலையில், பொருளாதாரத்தை உயர்த்த அந்நியத் திறமையாளர்களைச் சார்ந்திருக்கும் சிங்கப்பூரில், இதுபோன்ற இனவெறிப் பேச்சுகள் சமூக நல்லிணக்கத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
