ரூ.1.30 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
சென்னை: தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த 1.30 கோடி ரூபாய் கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, தனியார் விமானம் ஒன்று, நேற்று முன்தினம் இரவு தரையிறங்கியது. அதில் வந்திருந்த பயணியரை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று திரும்பினார்.
அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. தடுத்து நிறுத்தி விசாரித்ததில் முன்னுக்குபின் முரணாக பேசினார். இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை 1.3 கிலோ; சர்வதேச மதிப்பு 1.30 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், விசாரித்து வருகின்றனர்.