Politics
நாட்டிலே உள்ள சமூக நோய்க்கும் மருந்து தேவை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

"உங்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"நாட்டிலே உள்ள சமூகநோய்க்கும் மருந்து கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும்" என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற கலைஞர் தொலைக்காட்சி செய்தி பிரிவுத் தலைவர் திருமாவேலன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (07-09-2026) கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
"இந்த இனிய மணவிழா திருக்குறள் நெறிப்படி நடந்தேறியிருக்கிறது. இதுதான் தமிழர்களின் நெறி! இதுதான் தமிழர்களின் பண்பாடு! இதைத்தான் திராவிட இயக்கம் நூறாண்டு காலமாக வலியுறுத்தி, தொடர்ந்து நிறைவேற்றிச் செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது.
இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இது போன்ற சுயமரியாதைத் திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால், அந்தத் திருமணங்கள் சட்டப்படி முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அன்றைக்கு நாம் பெற்றிருக்கவில்லை. ஆனால், முதன்முதலில் ஒரு மாநிலக் கட்சி நம்முடைய தமிழ்நாட்டிலே ஆட்சிப் பொறுப்பேற்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி உதயமாகி, 1967-இல் அண்ணா முதன்முதலாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் சட்டமன்றத்திற்குள்ளே சென்று, நம்முடைய தமிழ்நாட்டிற்காக முத்தான மூன்று திட்டங்களை நிறைவேற்றித் தந்தார்கள்.
ஒன்று, இருமொழிக் கொள்கை. இன்னொன்று, தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக்கூடிய நிகழ்வு. அடுத்து, சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாவதற்கான சட்டம். அண்ணா அவர்களால் சட்டமன்றத்திலே சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் என்று நிறைவேற்றித் தந்திருக்கும் அந்தத் திருமணம்தான், இன்றைக்கு இங்கே நடந்தேறியிருக்கிறது.
இதுபோன்ற திருமணங்களை நம்முடைய தலைவர் கலைஞரும், இனமானப் பேராசிரியரும், இந்த இயக்கத்தின் முன்னோடிகளும் ஆயிரக்கணக்கான அளவில் நடத்தி வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து நாமும் அதை நடத்தி வருகிறோம்.
இல்வாழ்க்கையைப் பற்றி வள்ளுவர் சொல்கிறபோது, இல்வாழ்க்கை என்பது அன்பும் அறனும் கொண்டதாக அமைந்திட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நம்முடைய திருமாவேலனுடைய தந்தை புலவர் படிக்கராமு, திருக்குறளைப் பரப்புகிற பணியிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அதற்காகவே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய பணியைப் பாராட்டி, கடந்த திராவிட மாடல் ஆட்சியில் அவருக்குத் திருவள்ளுவர் விருது வழங்கிச் சிறப்பித்திருக்கிறோம். தலைமுறைகளைக் கடந்தும் இன்றும் இந்தப் பணியை நம்முடைய திருமாவேலனுடைய குடும்பத்தார் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது, மகிழ்ச்சிக்குரியது, பெருமைக்குரியது, போற்றுதலுக்குரியது!
அவருடைய பணியைப் பாராட்டி - திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். அந்த வகையில் இந்த மாதம் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில், தமிழறிஞர்களுக்கு, சான்றோர்களுக்கு, திராவிட இயக்கத்தின் முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கி நாம் தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறோம்.
அந்த வகையில் இந்த ஆண்டு முரசொலி அறக்கட்டளையின் சார்பில், நம்முடைய 'முரசொலி செல்வம் விருது' நம்முடைய திருமாவேலனுக்கு வழங்கப்பட இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை நீங்கள் ஏற்கனவே பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். அதனை நான் மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, அவருடைய இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழாவில் அவரைப் பாராட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இங்கே மணமகன், மணமகள் இரண்டு பேருமே மருத்துவர்கள். மருத்துவர்களாக இருக்கும் அவர்களிடம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, மனிதர்களின் நோய்க்கு இன்றைக்கு நீங்கள் எப்படி மருந்துகளைக் கண்டுபிடித்துச் சிகிச்சை வழங்கி வருகிறீர்களோ, அதுபோல இன்றைக்கு நாட்டிலே உள்ள 'சமூக நோய்க்கும்' மருந்து கண்டுபிடித்து, அதற்கும் நீங்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். அந்தப் பணியை நிறைவேற்றும் கடமையை நீங்கள் நிறைவேற்றித் தர வேண்டும் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்.
அடுத்து, உங்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகள் ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும், அந்தக் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள் என்ற வேண்டுகோளை வைத்து விடைபெறுகிறேன்.

