மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு லாரிகள் பறிமுதல் இருவர் கைது
ஊத்துக்கோட்டை: மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், இரண்டு பேரை கைது செய்தனர்.
தச்சூர் – சித்துார் இடையே, ஆறுவழிச்சாலை பணி நடந்த வருகிறது. நான்கு பிரிவுகளாக நடந்த இப்பணி, மூன்று பிரிவுகளில் முடிந்தது. போந்தவாக்கம் – சித்துார் இடையே, 99 கி.மீட்டர் பணிகள் முடிந்து, போக்குவரத்திற்கு திறக்கப்பட்டு உள்ளது.
போந்தவாக்கம் – தச்சூர் இடையே ஆமைவேகத்தில் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக, ஆந்திர மாநிலம் நகரி மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இருந்து மணல், கிராவல் மண் ஆகியவை எடுத்து வரப்படுகிறது. இதில், சில லாரிகள் மட்டும் அனுமதியுடன் வந்து செல்கிறது.
பெரும்பாலான லாரிகளில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுகிறது. இதை தடுக்க வேண்டிய கனிமம், வருவாய், காவல் துறை அதிகாரிகளை ‘கவனிப்பதால்’ எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நேற்று காலை பென்னுலுார்பேட்டை போலீசார் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த இரண்டு லாரிகளை சோதனை செய்தனர். இரண்டிலும் 10 யூனிட் திருட்டு மணல் இருந்தது தெரிந்தது.
இதுதொடர்பாக, லாரி ஓட்டுனர்களான, சுண்ணாம்புகுளம் கோகுலகிருஷ்ணன், 27, கும்மிடிப்பூண்டி சாமிரெட்டிகண்டிகை பாக்கியசீலன், 42, ஆகியோரை போலீசார் கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.