Lifestyle and human interest
இரண்டாவது திருமணம் செய்த அம்மா... ரேஷன் கார்டில் மகளின் பெயரைச் சேர்ப்பது எப்படி?
கோலோன் மற்றும் ஆஃப்டர் ஷேவ் தயாரிப்புகள் உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சி தருவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன

என் அப்பா என்னுடைய சிறு வயதிலேயே எங்களை விட்டு விலகி விட்டார். பிறகு, என் அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். எந்த ரேஷன் கார்டிலும் என் பெயர் இல்லை. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்... சாதி சான்றிதழ் பெற என்ன செய்ய வேண்டும்... என் அம்மா வழியில் தாத்தா வீட்டு ரேஷன் கார்டில் என் பெயரைச் சேர்த்து வாங்கலாமா அல்லது என் இரண்டாவது தகப்பனார் ரேஷன் கார்டில் பெயரைச் சேர்த்து வாங்கலாமா?
பதில் சொல்கிறார் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தின் மூத்த வருவாய் ஆய்வாளர் பா.மணிமாறன்.
நீங்கள் தாராளமாக உங்கள் அம்மா வழியில் தாத்தாவின் ரேஷன் கார்டில் உங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம். தாத்தாவின் ரேஷன் கார்டு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் (Registered Mobile Number), உங்களது ஆதார் கார்டு விவரங்களுடன் அருகில் உள்ள இசேவை மையத்தை (E-Sevai Centre) அணுகவும். `என் பெற்றோர் என் அருகில் இல்லை, தாத்தா கார்டில் குடும்ப உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்' என்று குறிப்பிட்டு ஆன்லைன் மூலம் ‘Name Inclusion’-க்கு விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் தாத்தாவின் குடும்ப அட்டையில் உங்கள் பெயரை இணைக்க முடியும். உங்கள் தாயின் இரண்டாவது கணவர் உங்களை சட்டபூர்வமாக தத்து (Legal Adoption) எடுத்திருந்தால் மட்டுமே அவரின் ரேஷன் கார்டில் சேர்க்க முடியும். தத்து எடுக்கப்படவில்லை எனில், தாத்தா அல்லது உங்களைச் சட்டபூர்வமாகப் பராமரிப்பவர்களின் கார்டில் சேர்ப்பதே நடைமுறைக்கு எளிதானது.
மேலும், சாதி சான்றிதழ் (Community Certificate) பெறுவதற்கு உங்களது ஆதார் கார்டு மற்றும் நீங்கள் படிக்கும் பள்ளியிலிருந்து சாதி விவரம் குறிப்பிட்ட School Bonafide Certificate ஆகியவற்றை இசேவை மையத்தில் சமர்ப்பிக்கவும். ஒருவேளை பள்ளிச் சான்றிதழில் சாதி பெயர் குறிப்பிடப்படவில்லை என்றால், உங்களின் அம்மா அல்லது தாத்தாவின் சாதி சான்றிதழைப் பயன்படுத்தலாம். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் எதுவும் உங்களிடம் இல்லையென்றால், உங்கள் பகுதிக்குரிய கிராம நிர்வாக அலுவலரை (VAO) நேரில் சந்தித்து நிலைமையை விளக்கவும். அவர் விசாரணை மேற்கொண்டு, நீங்கள் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்ற சான்றிதழை எழுதிக்கொடுப்பார்.
VAO வழங்கும் அந்தச் சான்றிதழை இசேவை மையத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் (Upload) செய்தால், சில நாள்களில் உங்களுக்கான சாதி சான்றிதழ் ஆன்லைன் மூலமாகவே வந்துவிடும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சட்டபூர்வமான இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்களின் ஆவணங்களை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்.
நம்மில் பலரும் சென்ட் என்று பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், அவை பெர்ஃபியூம், டியோடரன்ட், கோலோன் என விதம்விதமாக விற்கப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் என்ன வித்தியாசம்... எப்படி உபயோகிக்க வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த வானரோமா எசென்ஷியல் அண்ட் பெர்ஃபியூம்ஸ் நிறுவன சிஇஓ முஹமது சாதிக் கஸுரா.
சென்ட், பெர்ஃபியூம், அத்தர் என அனைத்துமே நறுமணத் தேவை களுக்கான பொதுவான பெயர்களாகப் பயன்படுத்தப்பட்டாலும், தயாரிப்பு முறை மற்றும் பயன்பாட்டில் இவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை. டியோடரன்ட் (Deodorant) என்பது உடலின் துர்நாற்றத்தைக் கட்டுப் படுத்துவதற்காகத் தயாரிக்கப்படுகிறது. இதில் நறுமண எண்ணெயின் அளவு குறைவாகவும், பாக்டீரியாவைக் கட்டுப் படுத்தும் பொருள்கள் அதிகமாகவும் இருக்கும். எனவே, இதை நேரடியாகச் சருமத்தில் பயன்படுத்தலாம். பெர்ஃபியூம் மற்றும் அத்தர் ஆகியவை வாசனைத் திரவியங்களின் மிகத் தூய்மையான வடிவங்கள். இவற்றில் நறுமண எண்ணெய் அதிகளவில் அடர்த்தியாக (Highly Concentrated) இருக்கும். இதனால் இவற்றிலிருந்து வெளிப்படும் நறுமணம் நீண்ட நேரம் நிலைத்து நிற்கும்.
கோலோன் மற்றும் ஆஃப்டர் ஷேவ் தயாரிப்புகள் உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சி தருவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் நறுமணத்தின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். மாறாக, சருமத்துக்குக் குளிர்ச்சியூட்டும் மென்த்தால் மற்றும் இயற்கையான எசென்ஷியல் ஆயில்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றின் வாசனை குறைந்த நேரமே நிலைக்கும்.
பெர்ஃபியூம் வகைகளை நாம் அணியும் உடைகளில் தெளிப்பதே சிறந்தது. புதிதாகப் பயன்படுத்தும் சென்ட் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா மற்றும் எவ்வளவு நேரம் நிலைத்து நிற்கிறது என்பதை அறிய, கை மணிக்கட்டு அல்லது காதுகளின் பின்புறம் லேசாகத் தெளித்துப் பரிசோதிக்கலாம். இவற்றை உடலின் சென்சிட்டிவ்வான பகுதிகளிலோ அல்லது காயம்பட்ட பகுதிகளிலோ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
