Lifestyle and human interest
வணிக ரீதியாக நிலத்தடி நீர் விற்பனை தளியில் மக்கள் போராட்டம்
உடுமலை: ‘விளைநிலங்களில் இருந்து நிலத்தடி நீரை வணிக ரீதியாக விற்பனை செய்யக்கூடாது,’ என தளி பகுதி மக்கள், வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
உடுமலை அருதே தளி சுற்றுப்பகுதி விளைநிலங்களில் இருந்து, வணிக ரீதியாக தண்ணீர் விற்பனை செய்யப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாக கிராம மக்களும், தளி விவசாயிகள் சங்கத்தினரும் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, ‘2016–17 ல், ஏற்பட்ட வறட்சிக்கு பிறகு, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க, பேரூராட்சி பகுதியில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீண்டும் நிலத்தடி நீரை வேறு பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், ’ என தளி பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு தளி–தீபாலபட்டி ரோட்டிலுள்ள விளைநிலத்தில் இருந்து வணிக ரீதியாக நிலத்தடி நீர் டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்படுவதாக மக்களுக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்று, அங்கிருந்த லாரிகளை சிறைபிடித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வாகனங்களில் வந்தவர்கள், ‘விவசாய பயன்பாட்டுக்காக இந்த தண்ணீரை எடுத்து செல்கிறோம். மாற்று பயன்பாட்டுக்கு விற்பனை செய்வதில்லை, என தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தளி போலீசார், வருவாய்த் துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், விதிகளின்படி நிலத்தடி நீரை விற்பனை செய்ய கூடாது என தற்காலிகமாக தடைவிதித்தனர்.
‘விதிகளை மீறி நிலத்தடி நீரை விற்பனையை முழுவதுமாக தடுக்க வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,’ என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச்சென்றனர்.