Madurai | மதுரை மக்களே உஷார்.. 16ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த ரூட் தெரியுமா?

போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்களும் பக்தர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, வரும் 16 ஆம் தேதி முதல் 24 மணி நேரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் 17ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 16ஆம் தேதி இரவு 10 மணி முதல், மறுநாள் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
கோயிலைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகளான சித்திரை, மாசி மற்றும் ஆவணி மூல வீதிகளில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்கள் குறிப்பிட்ட நேரங்களில் மாநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதால், மாற்றுப்பாதைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்தனி மாற்றுப்பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்லும் சாலைகள் ‘ஸ்டெரைல் சோன்’ ஆக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்காக பல்வேறு பகுதிகளில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, C2 அவுட்போஸ்ட், எல்லீஸ் நகர், அண்ணா பேருந்து நிலையம், தெப்பக்குளம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
மதுரை ரயில் நிலையத்திலிருந்து கோயில் பகுதிக்கு செல்லவும், 4 கோபுரங்களுக்கும் செல்லவும் தனித்தனி நடைபாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்களும் பக்தர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
