Politics
நேர்மையான தேர்தலுக்கு ஒத்துழைக்க வேண்டும் வேட்பாளர்களுக்கு பொது பார்வையாளர் அறிவுறுத்தல்
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத் தேர்தல் வேட்பாளர்களுடன் பொதுப்பார்வையாளர் பாண்டா கலந்துரையாடினார்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அக்., 6ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் சுதந்திரமான மற்றும் நேர்மையான ஓட்டுப்பதிவை உறுதி செய்யவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் வகையிலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் பொதுப் பார்வையாளராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாண்டா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இடைத் தேர்தல் ஏற்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில், அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், அவர், பேசியதாவது:
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு மட்டுமே வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
வாக்காளர்களைக் கவரும் வகையில் பணம், மதுபானம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி எந்தவிதமான முறையற்ற தாக்கத்திற்கும் அவர்களை உட்படுத்தக் கூடாது. முற்றிலும் சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
எவ்வித விதிமீறல்களும் இன்றி நேர்மையாகத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில், தட்டாஞ்சாவடி தொகுதியானது ஒரு புதிய மற்றும் ஆரோக்கியமான தேர்தல் நடைமுறைக்கு சிறந்த முன்னுதாரணமாக அமையும்’ என்றார்.
கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஞானவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.