Arts, culture, entertainment and media
பாக்யராஜின் கடைசி படம்.. டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா!

டி.ராஜேந்திரன் இசையமைத்த பாடலுக்கு இளையராஜா பாடியுள்ளார். டி.ராஜேந்தர் இசையில் இளையராஜா பாடுவது இதுவே முதல்முறை என்பது கவனிக்கத்தக்கது.
கே.பாக்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி திரைப்படம் ‘கன்னடத்து பைங்கிளி’. 'சிங்கம் புலி', 'மொட்ட சிவா கெட்ட சிவா' படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு டி.ராஜந்தர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அவரது இசையில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா பாடியுள்ளார்.
டி.ஆர். மற்றும் பாக்யராஜ் இணைந்து பணியாற்றிய ஒரே படம் 'கன்னடத்து பைங்கிளி' என்பதும் குறிப்பிடத்தக்கது. நாயகனின் தந்தையாக படம் முழுவதும் வரும் பாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பை பாக்யராஜ் வழங்கியுள்ளார்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்த படமும் இது தான். அதுவும் கணவன் மனைவியாகவே நடித்துள்ளனர். இப்படத்தில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ்நாடு-கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் 1990களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டுள்ளது என இயக்குநர் சாய் ரமணி தெரிவித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

