Politics
மாமனாருடன் ஏற்பட்ட மோதல்; மருமகனைத் தூக்கிய மாயாவதி

உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தனது மருமகனைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாயாவதியின் சகோதரர் ஆனந்தகுமாரின் மகனான ஆகாஷ் ஆனந்த் சமாஜ்வாதி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவரைத் தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்திருந்தார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பியும், ஆகாஷ் ஆனந்தின் மாமனாருமான அசோக் சித்தார்த்துக்கும், மாயாவதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, கட்சியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதனால், மாயாவதி மற்றும் ஆகாஷ் ஆனந்த் இடையே மோதல் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து, ஆகாஷ் ஆனந்த்திற்குக் கட்சியில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இந்த சூழலில், ”அசோக் சித்தார்த் கட்சியில் இருந்து விலகுவது தான், ஆகாஷ் ஆனந்த்திற்கு நல்லது” என்று மாயாவதி கருத்து தெரிவித்திருந்தார். இருப்பினும், அவர் கட்சியிலிருந்து விலகவில்லை. இதையடுத்து, கடந்த 3 ஆம் தேதி ஆகாஷ் ஆனந்தை தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார்.
இதனைத்தொடர்ந்து, தான் அரசியலில் இருந்து விலகுவதாக அசோக் சித்தார்த் அறிவித்தார். இதற்கடுத்த சில நிமிடங்களிலேயே, ஆகாஷ் ஆனந்த்தை கட்சியில் இருந்தே நீக்கும் அறிவிப்பை மாயாவதி வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்துப் பேசிய மாயாவதி, ”கட்சியின் உண்மையான நலன்கள் மற்றும் தனது அரசியல் எதிர்காலம் ஆகியவற்றைவிட, உறவுகள் மீதான பற்றுதலுக்கே ஆகாஷ் ஆனந்த் அதிக முக்கியத்துவம் அளித்து வந்துள்ளார். குடும்பமா அல்லது கட்சியா? என்ற நிலையில், இருமனதுடன் இருக்கும் அவரால் கட்சிக்கு எவ்வாறு நன்மை செய்ய முடியும்? எனவே, அவர் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். ஆகாஷ் ஆனந்த்தைக் கட்சியில் இருந்து நீக்குவது கட்சியினருக்குச் செய்யும் நன்மையாகவே கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)