ஆன்லைனில் டிரைவிங் லைசன்ஸ் வேலை இழந்த ஊழியர்கள் குமுறல்

கோவை: வரும் 15ம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழை 'டிஜிட்டல்' முறையில் பதிவிறக்கம் செய்யலாம், என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) ஓட்டுநர் உரிமத்துக்கு போட்டோ எடுப்பது, ஓட்டுனர் உரிமம், பதிவுச்சான்று போன்றவை 'பிரின்ட்' செய்வது போன்ற வேலைகளை செய்து வந்த தற்காலிக ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கோவை சரக போக்குவரத்து இணை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரகத்தில் 32 பேர் வேலை இழந்துள்ளோம். நாங்கள் 1998 முதல் வேலை பார்த்து வந்தோம். அரசு 'டிஜிட்டல்' முறை அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரத்தில் அரசாணையும் வந்தது.
வேலைக்கு வந்த எங்களை 12ம் தேதி வரை மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு அதிகாரிகள் கூறுகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊதியத்தில் பணிபுரிந்த எங்களுக்கு திடீரென வேலை இல்லை என்றால், எங்கள் குடும்பம் வறுமையில் தள்ளப்படும். அதனால் இதே துறையில் ஏதேனும் தற்காலிக பணி வழங்க வேண்டும் என்றனர்.