Arts, culture, entertainment and media
சர்தார் 2 - சினிமா விமர்சனம்

இரண்டாம் பாதியில் நாயகர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு அடுத்தடுத்து தீர்வுகள் எளிதாகக் கிடைப்பதால் பதற்றம் அப்படியே கரைகிறது.
கடந்தகாலக் குற்றவுணர்வை மீறி உலகைக் காக்கும் மிஷனில் வென்றாரா இந்த ஏஜென்ட் சர்தார்?
‘டோகு’ உயிரியல் ஆயுதத்தை இயக்கும் மூன்று ரகசியச் சாவிகளில் ஒன்று, ரா உளவாளி விஜய் பிரகாஷிடம் (கார்த்தி) வந்து சேர்கிறது. மற்ற சாவிகளை ‘பிளாக் டேகர்' குழுத் தலைவர் யோகி (எஸ்.ஜே.சூர்யா) வேட்டையாட, இதன் பின்னணியில் விஜய்யின் தந்தை சர்தார் சந்திரபோஸின் (கார்த்தி) தோல்வியடைந்த பழைய மிஷன் இருக்கிறது. குற்றவுணர்வுடன் வாழும் சர்தார், மகனுடன் களமிறங்கி ‘டோகு' பேரழிவைத் தடுத்தாரா என்பதே ‘சர்தார் 2’.
விஜி, சர்தார் என இரு வேடங்களிலும் தேவையான வேறுபாட்டைக் காட்டிப் படத்தைத் தாங்குகிறார் கார்த்தி. ஆனால், சில இடங்களில் அந்த மெனக்கெடலே துறுத்தலாகத் தெரிகிறது. யோகியாக எஸ்.ஜே.சூர்யாவுக்குப் பழக்கமான வில்லத்தனத்தைத் தாண்டி, புதிதாகச் செய்ய ஏதுமில்லை. மாளவிகா மோகன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோருக்குக் கதையில் இடமிருந்தாலும், கதாபாத்திரங்களில் ஆழமில்லை. ரஜிஷா விஜயன் பாத்திரத்திலும் அழுத்தமில்லை. யோகி பாபு - நிழல்கள் ரவியின் நகைச்சுவை ஆங்காங்கே கைகொடுக்கிறது.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவும், ராஜீவனின் கலை இயக்கமும் `பரபர’ ஸ்பை த்ரில்லருக்குத் தேவையான பிரமாண்டத்தைச் சேர்க்கின்றன. 80-களின் ஜப்பான் பின்னணி, சரக்கு விமானம் மற்றும் புல்லட் ரயிலில் நடக்கும் சண்டைகள் கவனம் ஈர்க்கின்றன. ஆனால், சீரற்ற ஏஐ கிராபிக்ஸ் காட்சிகள் அதை மட்டுப்படுத்துகின்றன. நீளும் இரண்டாம் பாதியில் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி இன்னும் ஸ்ட்ரிக்ட் ஆபீஸராக இருந்திருக்கலாம். சாம் சி.எஸ்-ஸின் பின்னணி இசை தனித்துவமாக மனதில் பதியவில்லை.
பல கோடிப் பேரைக் காப்பாற்றியும் தனது ஒற்றை ‘தவற்றால்’ ஓர் ஊரைக் காவு கொடுக்கும் சர்தார், தன்னையே மன்னிக்க முடியாமல் தவிக்கும் அழுத்தமான கோணத்தைப் பின்கதையாக வைத்து சுவாரஸ்யம் சேர்க்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். நேரடியாகக் கதைக்குள் நுழையும் தொடக்கம், 80-களின் ஜப்பானில் விரியும் டோகுவின் பின்னணி, விமானம் மற்றும் புல்லட் ரயில் சண்டைகள் ஆகியவை முதல் பாதிக்குப் பரபரப்பூட்டுகின்றன. இடைவேளைக் காட்சியும் எதிர்பார்ப்பை உயர்த்துகிறது.
ஆனால், இரண்டாம் பாதியில் நாயகர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு அடுத்தடுத்து தீர்வுகள் எளிதாகக் கிடைப்பதால் பதற்றம் அப்படியே கரைகிறது. எல்லா ட்விஸ்ட்டுகளையும் முதல் பாதியிலேயே சொல்லிவிட்ட பிறகும் நீண்ட நெடிய விளக்கங்கள், ஏனோ... கடந்த பாகத்தில் தண்ணீர் பாட்டில் அரசியலைப் பேசிய இயக்குநர், இந்த முறை ‘ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்’ குறித்த எச்சரிக்கையை முன்வைக்கிறார். ஆனால், வாட்ஸ்அப் ஃபார்வேர்ட் பாணியில், மிகவும் மேலோட்டமான தகவல்களுடன் அச்சமூட்டும் தொனியில் அவை மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றன. பெரும் பேரழிவை ஏற்படுத்த நினைக்கும் வில்லனின் நோக்கத்துக்காகச் சொல்லப்படும் காரணங்களும் செம போங்கு!
மொத்தத்தில், நல்ல தொடக்கம் இருந்தாலும் பலவீனமான இரண்டாம் பாதியால் ஏஜென்ட் சர்தாரின் மிஷன் தடம்புரள்கிறது.
