Sport
கும்மிடியில் ஸ்டேடியம் அமைக்க விளையாட்டு குழுவினர் எதிர்பார்ப்பு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி நகரை ஒட்டிய பகுதியில் ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி விளையாட்டு பயிற்சி மையங்கள் சார்பில், திருவள்ளூர் கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மினி ஸ்டேடியம் அமைக்க, தமிழக அரசின் சிறப்பு நிதி மற்றும் சட்டசபை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி பங்களிப்பில், கடந்த ஆட்சியில், மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி நகரை மையமாக கொண்டு ஸ்டேடியம் அமைக்கப்படும் என, விளையாட்டு குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால், நகரில் இருந்து, 15 கி.மீ-.,யில் உள்ள பூவலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட அமிர்தமங்களம் கிராமத்தில், மினி ஸ்டேடியத்திற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த குத்துச்சண்டை, சிலம்பம், வில்வித்தை, தடகளம், கால்பந்து, யோகா உள்ளிட்ட விளையாட்டு குழுவினர், திருவள்ளூர் கலெக்டருக்கு மனு அனுப்பினர்.
கும்மிடிப்பூண்டி பகுதியில், 35க்கும் மேற்பட்ட விளையாட்டு பயிற்சி மையங்கள் உள்ளன. பலர் விளையாட்டு பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், நுாற்றுக்கணக்கான வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.
அவர்களுக்கு முறையாக பயிற்சி வழங்க, கும்மிடிப்பூண்டி நகரை ஒட்டிய பகுதியில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த வேண்டும். கும்மிடிப்பூண்டிக்கு ஒதுக்கிய மினி ஸ்டேடியம், யாருக்கும் பயன்படாத இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள விளையாட்டு வீரர் – வீராங்கனையரை ஊக்குவிக்க, கும்மிடிப்பூண்டி நகரை ஒட்டிய பகுதியில், ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.