கல்குவாரி குட்டையில் குப்பை கொட்டி மாசு
குன்றத்துார், செப். 11-– சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் குப்பை கொட்டி மாசு ஏற்படுத்துபவர்கள் மீது
சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் குப்பை கொட்டி மாசு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அடுத்த சிக்கராயபுரத்தில், 23 கல்குவாரி குட்டைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும், 300 – 400 அடி ஆழம் கொண்டவை. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இல்லாத நேரத்தில், இந்த கல் குவாரி குட்டைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, சென்னைக்கு வழங்குவர்.
இந்த 23 கல் குவாரி குட்டைகளையும் ஒருங்கிணைத்து, நீர்த்தேக்கமாக மாற்ற, அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிக்கராயபுரம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை மற்றும் இரவு நேரங்களில் பலர் இந்த குவாரியை சுற்றி குப்பையை கொட்டி செல்கின்றனர்.
குப்பை கழிவுகள், குவாரி குட்டை நீரில் விழுந்து பல இடத்தில் மிதக்கின்றன. குப்பை கழிவுகளால் குவாரி நீர் மாசடைந்து வருகிறது.
குப்பை கொட்டுபவர்கள் மீது காஞ்சிபுரம் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.