ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பந்த் இயல்பு வாழ்க்கை முடங்கியது
முசாபராபாத்:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஜே.ஏ.ஏ.சி., எனப்படும் கூட்டு அவாமி நடவடிக்கை குழு விடுத்த பொது வேலைநிறுத்தத்தால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை, கூட்டு அவாமி நடவடிக்கை குழு முன்னெடுத்து நடத்தி வருகிறது.
போராட்டங்களை கட்டுப்படுத்த பாக்., அரசு பல அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. இதில் அப்பாவி பொது மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், அங்கு நடக்கும் அடக்குமுறைகளை மறைக்க, இணைய முடக்கம் மற்றும் கடுமையான ஊடக தடைகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.
இந்நிலையில், மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது-. நேற்று ஜே.ஏ.ஏ.சி., அழைப்பு விடுத்த பொது வேலைநிறுத்தத்தால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முக்கிய வணிக மையங்கள், உள்ளூர் சந்தைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டன. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதோடு, முக்கிய சாலைகளும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.