Politics
புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு : களத்தில் இறங்கிய மக்கள்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த 3ஆம் தேதி (03.09.2026) சட்டமன்ற விதி 110-இன் கீழ், சென்னையில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சட்டப்பேரவையுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை ஆகியவற்றுக்குச் சொந்தமான மொத்தம் 25.55 ஏக்கர் நிலங்கள் புதிய கட்டிட வளாகம் கட்டுவதற்காக அடையாளம் காணப்பட்டன.
இதனையடுத்து 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகக் கட்டிட வளாகம் கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டினப்பாக்கத்தில், சீனிவாசபுரம், முள்ளிக்குப்பம் உள்ளிட்ட மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று (15.09.2026) ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள், “புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள பகுதி, கடற்கரையில் இருந்து அருகில் உள்ளது. இந்தப் பகுதி மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் உள்ளது. இங்குள்ள பிரதான சாலையில்தான் லூப் சாலை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மீன்களை உலர்த்துவது, மீன் வலைகளை உலர்த்துவது, மீன்களை விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் குடிசை மாற்று வாரியத்திற்குச் சொந்தமான இடமாக உள்ளது. இப்பகுதியில் மீனவர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகள் கட்டுவதற்கான திட்டம் உள்ளது.
எனவே இந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்தனர். அதோடு எண்ணூர் மற்றும் பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் அடுத்த கட்டமாகப் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து மீனவ மக்களிடம் பிரதிநிதிகள் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)