கி.பி.1251-ஐ காட்டும் அரிய நாணயம்... பாண்டிய மன்னர் காலத்து வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் புதலூர் அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால செப்புக் காசும், பல்லவர் காலத்தைச் சேர்ந்த பழமையான சிவலிங்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் புதலூர் அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால செப்புக் காசும், பல்லவர் காலத்தைச் சேர்ந்த பழமையான சிவலிங்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுச் சின்னங்கள் அப்பகுதியின் தொன்மை மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் புதலூர் அருகே இலாங்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், செங்கமேடு பகுதியில் குழி தோண்டியபோது பழமையான நாணயம் ஒன்றைக் கண்டெடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆய்வாளர்கள், நாணயத்தை ஆய்வு செய்ததில் அது பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது என அடையாளம் கண்டுள்ளனர். மேலும், அருகிலுள்ள ஒரு தோப்பில் பழமையான சிவலிங்கம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட செப்புக் காசு 3.30 கிராம் எடை கொண்டதாகும். இது கி.பி. 1250 முதல் 1284-ஆம் ஆண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்து நாணயம் என சரஸ்வதி மகால் நூலகத்தின் தமிழ் பண்டிதர் மணி மாறன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து தெரிவித்துள்ளனர். மேலும், இந்த நாணயம் கி.பி. 1251-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாணயத்தின் முன்புறத்தில் மனித உருவமும், பின்புறத்தில் இரண்டு விளக்குகளுக்கு இடையே செங்குத்தாக நிற்கும் மீன் உருவமும் காணப்படுகின்றன. நாணயத்தின் விளிம்பில் “எல்லந்தலையானான்” என்ற தமிழ் வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும், அதில் காணப்படும் தமிழ் எண் “1”, மன்னரின் ஆட்சியின் முதல் ஆண்டைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அருகிலுள்ள ஒரு தோப்பில் சுமார் 3 அடி உயரம், 3 அடி நீளம் மற்றும் 3 அடி அகலம் கொண்ட சிவலிங்கம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிவலிங்கம் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். செங்கமேடு பகுதி இலாங்குடி மற்றும் நியாமம் ஆகிய கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ளது. ஒரே பகுதியில் பாண்டியர் காலத்து நாணயமும், பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சிவலிங்கமும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, அப்பகுதியின் பழமையான வரலாற்றையும், தொல்லியல் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
