Economy, business and finance
விநாயகர் சதுர்த்தி எதிரொலி பூக்கள் விலை ‘கிடுகிடு’
கடலுார்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடலுாரில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
எல் நினோ பாதிப்பு காரணமாக கடலுார் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பூக்களில் மொட்டுக்கள் விடுவது குறைந்து வருகிறது. வரத்து குறைவால் பூக்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை 14ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட்டில் வழக்கத்தை விட பூக்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. அதாவது குண்டுமல்லி, முல்லை அரும்பு கிலோ 1000 ரூபாய்க்கும், ரோஜா 300, சாமந்தி 300, சம்பங்கி 800, கனகாம்பரம் 1000 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த விலை தொடர்ந்து அதிகரிக்கும் என கூறப்படுகிறது.