Crime, law and justice
செல்போனுக்குள் ஆபாச சாம்ராஜ்ஜியம்! - மாணவர்கள் முதல் கணவர் வரை...
கொச்சி கல்லூரி மாணவர் ஸ்ரீஹரி, தன்னுடன் படிக்கும் சில குறிப்பிட்ட மாணவிகளின் புகைப்படங்களை ரகசியமாகத் தனது செல்போனில் வைத்திருப்பதாக, சக மாணவர்கள் பேராசிரியர்களிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

கேரளாவை அதிரவைத்த கைது படலம்!
சக மாணவிகள், பேராசிரியைகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து விற்பனை செய்த மாணவர்கள் இருவரும், மனைவியுடன் இருந்த அந்தரங்க வீடியோக்களையே ஆபாச இணையதளத்தில் விற்றுப் பணம் பார்த்த கணவரும் அடுத்தடுத்து கைதான சம்பவம் கேரளாவில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆபாச வீடியோ விற்பனையின் பின்னணியில் நடந்தது என்ன?
கேரள மாநிலம், கொச்சி, திருக்காக்கரை பாரதமாதா கல்லூரியில் படிக்கும் மாணவர் ஸ்ரீஹரி என்பவர், தன்னுடன் படிக்கும் சக மாணவிகள், ஆசிரியைகள் ஆகியோரின் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, டெலிகிராம் குழுக்களில் விற்பனை செய்ததை அடுத்து அவரும், அவருடைய நண்பரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதேபோல கொல்லம் மாவட்டம், கொட்டியம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தன் மனைவியின் அந்தரங்கக் காட்சிகளை வீடியோ எடுத்து ஆபாச இணையதளங்களில் விற்பனை செய்ததைத் தொடர்ந்து சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
மாணவிகளின் ஆபாச மார்பிங் வீடியோக்கள்!
இது குறித்து போலீஸ் தரப்பில் பேசியபோது, “கொச்சி கல்லூரி மாணவர் ஸ்ரீஹரி, தன்னுடன் படிக்கும் சில குறிப்பிட்ட மாணவிகளின் புகைப்படங்களை ரகசியமாகத் தனது செல்போனில் வைத்திருப்பதாக, சக மாணவர்கள் பேராசிரியர்களிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். பேராசிரியர்களும் ஸ்ரீஹரியின் செல்போனை வாங்கிப் பார்த்தபோது, சில மாணவிகள், பேராசிரியைகளின் புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு வைத்திருப்பது தெரிய வந்தது. உடனே கல்லூரி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகாரளித்தது.
அதையடுத்து மாணவன் ஸ்ரீஹரியை கைதுசெய்த திருக்காக்கரை போலீஸார், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்ததுடன், அவரைக் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது, அவருடைய செல்போனில் கல்லூரி மாணவிகளின் ஆபாச மார்பிங் வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பணம் செலுத்திப் பார்க்கும் வகையில் டெலிகிராம் குழுக்களில் பகிர்ந்ததும் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து ஸ்ரீஹரி மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.
ஸ்ரீஹரியின் டெலிகிராம் குழுவில் தீவிரமாக இயங்கிய சனீஷ் என்ற மாணவனின் செல்போனிலும் சிறுமியரின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. இதையடுத்து சனீஷும் போக்சோ பிரிவில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். டெலிகிராம் குழுக்களில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்பதால், விரிவான தரவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். மலப்புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் உள்ளிட்டோரின் தொடர்பு குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
மனைவியின் அந்தரங்க வீடியோக்களை விற்ற கணவன்!
கொல்லம் வழக்கைப் பொறுத்தவரை கைதுசெய்யப்பட்ட இளைஞர், தன் மனைவியுடன் நெருக்கமாக இருப்பதை ரகசியமாக வீடியோக்கள் எடுத்து ஆபாச இணையதளங்களில் விற்பனை செய்து பணம் சம்பாதித்திருக்கிறார். அவர், தன் மனைவி, 4 வயது மகளுடன் பிரிட்டனில் வசித்தபோதே இந்தத் தவறைச் செய்து வந்திருக்கிறார். இதற்கிடையே குடும்பத்துடன் ஊருக்கு வந்த அந்த இளைஞர், கடந்த ஜூன் மாதம் காப்பில் பகுதியிலுள்ள ஒரு விடுதியில் மனைவியுடன் தங்கியிருந்தார்.
அப்போது மனைவியுடன் நெருக்கமாக இருப்பதை ரகசியமாக வீடியோ எடுக்க முயன்றிருக்கிறார். அதை எப்படியோ தெரிந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்த மனைவியை இளைஞர் தாக்கியிருக்கிறார். இது குறித்து கடந்த மாத இறுதியில் அவருடைய மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, போக்சோ பிரிவுகளில் இளைஞர் மீது வழக்கு பதியப்பட்டு, அவரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தன் மகள் உடன் இருக்கும் போதே மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளைப் படம் பிடிக்க முயன்றதாலேயே போக்சோ வழக்கு பதியப்பட்டிருக்கிறது” என்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கொச்சி சிட்டி கமிஷனர் காளிராஜ், “ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பகிர்வதற்காக கல்லூரி மாணவர்கள் டெலிகிராமில் பிரத்யேக ‘பிரீமியம் குழுக்களை’ உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் சட்டவிரோதமாகப் பணம் ஈட்டியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் சான்றுகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. விரிவான விசாரணை நடத்தி இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டும்!
ஆபாச வீடியோக்கள் விற்பனை குறித்து கொல்லம் சிட்டி போலீஸ் கமிஷனர் ஹேமலதாவிடம் பேசினோம். “கொல்லம் சம்பவத்தில் பாதிக்கப் பட்ட பெண் தைரியமாக முன்வந்து புகாரளித்ததால்தான் காவல்துறையால் உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடிந்தது. இன்றைய டிஜிட்டல் சூழலில் மாணவர்கள் அதிக அளவில் செல்போன்களைப் பயன்படுத்துகின்றனர். இணையத்தில் லட்சக்கணக்கான விஷயங்கள் கொட்டிக்கிடப்பதால், குழந்தைகள், தங்கள் செல்போன்களில் எதைப் பார்க்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பெண்களை எவ்வாறு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற நற்பண்பையும், பெண்களைத் தவறாக நடத்தக் கூடாது என்ற புரிதலையும் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்” என்றார்.
இது போன்ற குற்றங்களைத் தடுக்க சட்ட நடவடிக்கை மட்டுமல்ல, சமூக விழிப்புணர்வும் அவசியம்.
