Lifestyle and human interest
எழுப்ப உதவும் அலாரத்தை தூங்குவதற்கும் பயன்படுத்தலாமே!

அனுபவங்கள் ஆயிரம் - ஒவ்வொன்றும் ரூ.300 பரிசு பெறுகிறது
போன் பேச குறிப்பிட்ட நேரம்!
உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். போனில் பிஸியாகப் பேசிக்கொண்டே இருந்தார். காத்திருந்தேன். பேசி முடித்த பிறகு, “சார், இது என்னுடைய போன் டைம். அந்த நேரத்தில் வந்துட்டீங்க” என்றார். தொடர்ந்து, “செல்போன் வந்தபிறகு இன்ஸ்டா, ஃபேஸ்புக், யூடியூப் போன்றவற்றைத்தான் அதிகம் பார்க்கிறோம். உறவுகளுடன் பேசுவதையே மறந்துவிடுகிறோம். எனவே, வாரத்தில் ஒரு நாள் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி நண்பர்கள், உறவினர் களுடன் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்” என்றார். அவர் சொன்னதும் நியாயமாகவே இருந்தது.
உறங்குவதற்கு ‘அலாரம்’!
நான் காலையில் எழுந்துகொள்வதற்கு மட்டும் ‘அலாரம்’ வைத்துக்கொள்வதில்லை. இரவு படுக்கச் செல்வதற்கும் ‘அலாரம்’ வைத்துக்கொள்வதைக் கடைப்பிடிக்கிறேன். காரணம், எல்லா வேலைகளையும் திட்டமிட்டு முடித்துவிட்டு அலாரம் ஒலித்ததும் படுத்து விடுவேன். இதனால் நன்றாகத் தூங்கி எழுந்து, காலை வேலைகளைச் சுறுசுறுப்பாகச் செய்ய முடிகிறது. தேவையான தூக்கம் கிடைத்துவிடுவதால், பகலில் சோர்வு, டென்ஷன் இல்லாமல் வேலை செய்யவும் முடிகிறது.
ஹேண்ட்பேக்கில் விசில்... எதற்கு?
சமீபத்தில் நானும் என் தோழியும் ஒரு திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தோம். அப்போது தோழியின் செல்போன் ஒலித்தது. ஹேண்ட் பேக்கை திறந்து எடுத்த போது ஒரு விசிலும் அதனுடன் வந்தது. ‘`என்னடி குழந்தை மாதிரி விசில் வெச்சிருக்கே?’' என்று கேட்டேன். “அது என் பாதுகாப்புக்காக வெச்சுருக்கேன். இரவு நேரம் கழித்து வீடு திரும்ப வேண்டிவந்தா, அப்போ என்னை யாராவது பின் தொடர்ந்து வருவதுபோல் இருந்தா, இந்த விசிலை எடுத்து பலமா ஊதிடுவேன். ரோட்ல போற சிலர் திரும்பிப் பார்த்து, ‘என்னாச்சும்மா?’னு கேட்பாங்க. வீட்டுக்குள்ள இருக்குற சிலர் எட்டிப் பார்ப்பாங்க. அப்புறம் என்ன, என் பின்னாடி வந்தவங்க நழுவிடுவாங்க” என்றாள். அட, நல்ல ஐடியா!
முதியவர்களின் மாத்திரை... எச்சரிக்கை!
ஞாபகமறதி வந்து அவதியுறும் என் பக்கத்து வீட்டுப் பாட்டி, ரத்தக் கொதிப்பு மற்றும் இதய நோய்க்காக தான் உட்கொள்ள வேண்டிய மருந்துகளை, அன்று ஒன்றுக்கு மூன்று முறை சாப்பிட்டுவிட்டார். மயக்க நிலைக்குச் சென்று விட்டவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தார்கள். மறதி உள்ள முதியோர்களுக்கு மருந்து, மாத்திரை கொடுப்பதில் வீட்டில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு.
அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com
