Lifestyle and human interest
கனவு இல்ல திட்டத்தில் 364 பேருக்கு நிதி விடுவிப்பு தினமலர் செய்தி எதிரொலி
தேனி, செப். 18–மாவட்டத்தில் கனவு இல்ல திட்டத்தில் 364 பேருக்கு முதற்கட்ட நிதியாக தலா ரூ.85 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த தி.மு.க., ஆட்சியில் 2026 ஜன., பிப்.,ல் கனவு இல்ல திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ரூ. 3.5 லட்சத்தில் வீடுகட்ட பணி ஆணை வழங்கப்பட்டது. பணி ஆணை பெற்ற பலரும் கடன், மற்றும் சேமிப்பு பணம் மூலம் வீடு கட்டும் பணியை துவங்கினர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் முதல்கட்ட நிதிகூட ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் ‘கனவு இல்ல திட்ட பயனாளிகள் தவிப்பு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் 364 பயனாளிகளுக்கு முதற்கட்ட நிதியாக தலா ரூ.85 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘மாவட்டத்தில் கடந்த ஜன., பிப்.,ல் 750 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது. அதில் 364 பேருக்கு தனி பயனர் ஐ.டி.,கள் துவங்கப்பட்டன. அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 364 கட்டுமான பணிகளை ஒரளவிற்கு முடித்துள்ளது தெரிந்தது. இதன் அடிப்படையில் ஒன்றியம் வாரியாக ஆண்டிபட்டி 120, க. மயிலாடும்பாறை 64, பெரியகுளம் 62, தேனி 36, போடி 31, உத்தமபாளையம் 13, சின்னமனுார் 29, கம்பம் 9 என மொத்தம் 364 பேருக்கு முதற்கட்ட நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள் என்றனர்.