காப்பர் ஒயர்கள் திருடிய மூவர் கைது
எழும்பூர்: சூரிய சக்தி பலகையில் பொருத்தப்பட்ட காப்பர் ஒயர்கள் திருடிய, பீஹார் மாநிலத்தை சேர்ந்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 38; எழும்பூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது நிறுவனத்திற்கு சொந்தமாக, காந்தி இர்வின் சாலையில் அடுக்குமாடி வாகன நிறுத்த கட்டடம் உள்ளது. அங்கு, மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சூரிய சக்தி பலகையில் இருந்த, காப்பர் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து ராஜேஷ், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சோனு, 28, முகமது மெராஸ், 32, அஷ்ரார் அகமது, 33, ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் ஒயர்கள் மீட்கப்பட்டன.