அரசு பஸ்களில் திக்திக் பயணம் அதிகாரிகள் அலட்சியத்தால் அச்சம்

வால்பாறை: வால்பாறை மலைப்பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாததால், விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், 38 வழித்தடங்களில் பஸ் இயக்கப்படுகிறது. இது தவிர, நான்கு ஸ்பேர் பஸ்களும் இயக்கப்படுகின்றன. வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், பழநி, சேலம், மன்னார்க்காடுக்கு நேரடி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சமீப காலமாக, பஸ் பராமரிப்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், அடிக்கடி பழுதாகி நிற்பதோடு, விபத்துக்குள்ளாகின்றன. சமீபத்தில், வால்பாறையிருந்து பொள்ளாச்சி, கோவை, ஆனைக்கட்டி வழியாக மன்னார்க்காடு இயக்கப்பட்ட அரசு பஸ் ஆபத்தான முறையில் ஒரு புறமாக சாய்ந்து சென்றது. ஆனைக்கட்டியிலிருந்து மன்னார்க்காடு செல்லும் போது, பஸ் சாய்ந்து தள்ளாடியதால், பயணர் பீதியடைந்தனர். இதனை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கூறுகையில், ‘பஸ்களில் உள்ள குறைபாடுகளை எழுதி வைத்தாலும், அதை சரி செய்வதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
குறிப்பாக, தற்காலி டிரைவர்கள் பஸ் பிரச்னை குறித்து புகார் கூறினால், அதை மெக்கானிக்குகள் அலட்சியப்படுத்துகின்றனர். இதனால், வால்பாறை மலைப்பாதையில் இயக்கப்படும் பஸ்கள் அடிக்கடி பழுதடைகின்றன,’ என்றனர்.
அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் சுப்ரமணியத்திடம் கேட்டபோது, ‘‘மன்னார்க்காடு சென்ற பஸ்சில் திடீரென ‘பெட்’ உடைந்ததால் பஸ் சரிவாக சென்றுள்ளது. அந்த பஸ் உடனடியாக பழுதுநீக்கப்பட்டது. டெப்போவில், 12 மெக்கானிக் பணிபுரிய வேண்டிய இடத்தில், 9 பேர் மட்டுமே உள்ளனர். இருப்பினும், பஸ் பழுது நீக்குவதில் எவ்வித குறைபாடும் இல்லை,’ என்றார்.