பஸ்சில் 15 கிலோ குட்கா கடத்திய மூவர் கைது
திருத்தணி, செப். 18– ஆந்திராவில் இருந்து, பேருந்து மூலம் 15 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த மூவரை, போலீசார்
ஆந்திராவில் இருந்து, பேருந்து மூலம் 15 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த மூவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை, திருத்தணி வழியாக திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலுார் ஆகிய மாவட்டங்களுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகளவில் கடத்தி செல்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., சாய்பிரணீத் உத்தரவின் பேரில், திருத்தணி இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார், பொன்பாடி சோதனைச்சாவடியில் சோதனை நடத்தினர்.
அப்போது, திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக, காஞ்சிபுரம் சென்ற தனியார் பேருந்தை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, மூன்று பேர் வைத்திருந்த பைகளில், 15 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், திருவண்ணாமலை நாவல்பாக்கத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி, 36, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பாப்பன்குளத்தைச் சேர்ந்த கமல்ராஜ், 30, சென்னை, செங்குன்றம் காவாங்கரை பகுதியைச் சேர்ந்த சரவணன், 47, என தெரிய வந்தது.
தொடர்ந்து, மூவரையும் கைது செய்த திருத்தணி போலீசார், 15 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.