தி.மலை - திருப்பத்துார் புதிய ரயில் பாதை ஆய்வு பணி நிறைவு

சென்னை: திருவண்ணாமலை - திருப்பத்துார் இடையே, 85 கி.மீ., துார புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, இறுதிகட்ட ஆய்வு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயில் தமிழகம், ஆந்திரா, கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில், கூடுதல் ரயில் பாதைகளை இணைத்து, ரயில்களின் சேவையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, திருவண்ணாமலை - திருப்பத்துார் இடையே, 85 கி.மீ., துார ரயில் பாதை திட்டத்துக்கு, இறுதிகட்ட ஆய்வு பணிகளை தற்போது முடித்துள்ளோம்.
ரயில்வேயின் ஒப்புதல் பெற்ற பின், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ரயில் நிலையங்கள் அமைவிடம், நிலம் தேவை, திட்ட மதிப்பீடு செலவு உள்ளிட்ட விபரங்கள் இடம்பெறும். மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு பெறப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.