வேளாண் இயந்திரங்களுக்கு மானிய திட்டம் துவக்கம்
மதுரை: வேளாண்மை பொறியியல் துறையின் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
கருவி வாங்க விரும்பும் விவசாயிகள், தமிழகத்தின் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு தளத்தில் (அக்ரி ஸ்டாக்) பெயர், விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம், இயந்திர களையெடுக்கும் கருவி, தட்டை வெட்டும் கருவி வாங்கும் பொதுப்பிரிவைச் சேர்ந்த குறு, சிறு விவசாயிகளுக்கு 10 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும்.
‘உழவர் செயலி’யில் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் ‘வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு’ – வேளாண்மைப் பொறியியல் மானியத் திட்டங்கள் என்ற பிரிவில் ஆதார் எண்ணை பதிவு செய்து தேவையான இயந்திரம் அல்லது கருவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாதந்தோறும் 1 முதல் 7 ம் தேதிக்குள் விண்ணப்பித்தால் 8ம் தேதி கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தகுதியான விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பம் குறைவாக இருந்தால் மீண்டும் 15 முதல் 21ம் தேதி வரை மீண்டும் விண்ணப்பித்தால் 22ம் தேதி குலுக்கல் நடைபெறும்.
கூடுதல் விபரங்களுக்கு மதுரை டி.பி.கே. ரோடு வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் (77088 84126) அல்லது உசிலம்பட்டியில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை (94431 48364) தொடர்பு கொள்ளலாம்.