Politics
ரோட்டரி தாய்மை திட்டம் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
பல்லடம்: பல்லடம் அருகே, ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடந்த தாய்மை திட்டத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுல்தான்பேட்டை விண்ட் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில், தாய்மை திட்ட விழா கொண்டாடப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் சங்கர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் சந்தோஷ் குமார் வரவேற்றார். மாவட்ட கவர்னர் மாருதி, மாவட்ட சமுதாய சேர்மன் மயில்சாமி, மாவட்ட இயக்குனர் சுவாமிநாதன், துணை ஆளுநர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் விஜயகுமார், கனகராஜ் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு, ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன், 100வது வார விழாவை முன்னிட்டு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இதில், 25 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து, கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.