Economy, business and finance
மிக நீளமான கப்பலை கையாண்டு துாத்துக்குடி துறைமுகம் சாதனை

துாத்துக்குடி: துாத்துக்குடி துறைமுகத்தில் இதுவரை இல்லாத மிக நீளமான சரக்கு பெட்டக கப்பலை கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பெரிய வகை கப்பல்கள் வந்து செல்லும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், துறைமுகத்திற்கு முதல் முறையாக 335.23 மீட்டர் நீளம், 51 மீட்டர் அகலமும், 13.5 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட எம்.வி., சி.எம்.ஏ., சி.ஜி.எம்., தோரியம் என்ற சரக்கு கப்ப லை நேற்று கையாண்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் கூறுகையில், “துறைமுகத்தில் இதுவரை கையாண்டுள்ள சரக்கு பெட்டக கப்பல்களிலேயே தோரியம் கப்பல் மிக நீளமானது. பிரேசில் நாட்டில் உள்ள சாண்டோஸ் துறைமுகத்தில் இருந்து வந்த கப்பலில் மொத்தம் 3,276 கன்டெய்னர் பெட்டிகள் கையாளப்பட்டன.
''கடந்த ஆண்டு டிசம்பரில் 304 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் கையாளப்பட்டதே துறைமுகத்தின் உச்ச அளவாக இருந்தது. தற்போதைய கையாளல், பெரிய சரக்கு பெட்டக கப்பல்களை கையாளும் துறைமுகத்தின் திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது,” என்றார்.