Education
செப். 11 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு டெல்லி அரசு நடவடிக்கை

தலைநகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை (BRICS Summit) முன்னிட்டு, செப்டம்பர் 11 அன்று டெல்லியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் பொது நிர்வாகத் துறை பிறப்பித்த உத்தரவின்படி, கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் செப்டம்பர் 11 அன்று விடுமுறை பொருந்தும்.
டெல்லியில் செப்டம்பர் 11 முதல் 13 வரை பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சர்வதேச தலைவர்கள், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் தூதர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளதால், தலைநகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
நகரில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பையும் பயணச் சிரமங்களையும் கருத்தில் கொண்டும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெறும் 2026-ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், புதுமைப்படைப்புகள் (Innovation), அறிவுப் பகிர்வு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் உறுப்பு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், இந்த சர்வதேச நிகழ்வையொட்டி டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள நட்சத்திர ஹோட்டல்களின் அறைகளுக்கான தேவையும் கட்டணமும் கணிசமாக அதிகரித்துள்ளன
