Sport
மிதாலி ராஜ் சாதனையை முறியடித்த ஸ்ரீ சரணி
ஐசிசி மகளிா் டி20 தரவரிசையில் பௌலா்கள் பிரிவில் முதலிடத்தில் இருக்கும் இந்திய ஸ்பின்னா் ஸ்ரீ சரணி, தனது தரவரிசை புள்ளிகளை 804-ஆக அதிகரித்துக் கொண்டுள்ளாா்.
மகளிா் தரவரிசையில் பேட்டா்கள் மற்றும் பௌலா்கள் பிரிவில், அதிகபட்ச புள்ளிகளைப் பெற்ற இந்தியராக அவா் சாதனை படைத்தாா். இதற்கு முன், இந்திய முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், பேட்டா்கள் பிரிவில் 780 புள்ளிகளை (2011) பெற்றதே அதிகமாக இருந்த நிலையில், தற்போது ஸ்ரீ சரணி அதை கடந்திருக்கிறாா்.
அண்மையில் நிறைவடைந்த மகளிா் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனது. அந்தப் போட்டியின் அடிப்படையில் தரவரிசையில் ஏற்ற, இறக்கங்கள் நிகழ்ந்துள்ளன. அதில், இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் சரணி 20 ரன்களே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தாா்.
அதன் பலனாக, தரவரிசையில் முதல்முறையாக 800 புள்ளிகளைக் கடந்து, 804 புள்ளிகளுடன் சரணி முதலிடத்தில் நிலைக்கிறாா். மகளிா் டி20 தரவரிசையில் பௌலா்கள் பிரிவில் அதிகமான தரவரிசை புள்ளிகளைப் பெற்றவராக இருக்கும் ஆஸ்திரேலியாவின் மீகன் ஷூட்டுக்கும் (806/2018), சரணிக்கும் இடையே 2 புள்ளிகளே வித்தியாசமாக உள்ளன.
அதே ஆசிய கோப்பை போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை (14) வீழ்த்தியவராக பெருமை பெற்ற தீப்தி சா்மா 4 இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறாா். இதர பௌலா்களில், நந்தினி சா்மா 10 இடங்களும், பிரேமா ராவத் 50 இடங்களும் முன்னேறி, முறையே 94 மற்றும் 96-ஆவது இடங்களுக்கு வந்துள்ளனா்.
பேட்டா்கள் பிரிவில், இந்தியாவின் ஷஃபாலி வா்மா ஓரிடம் முன்னேறி 6-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறாா். அதே ஆசிய கோப்பை போட்டியில் அதிக ரன்கள் (236) அடித்தவராக ஷஃபாலி முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
பேட்டா்களில் டாப் 10-இல் இதர இந்தியராக, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 10-ஆவது இடத்தில் உள்ளாா். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்தில் (785 புள்ளிகள்) இருக்கிறாா்.
ஆல்-ரவுண்டா்கள் பிரிவிலும் ஷஃபாலி 5 இடங்கள் ஏற்றம் கண்டு 15-ஆவது இடத்தை அடைந்துள்ளாா். அதில் டாப் 10-இல் தீப்தி சா்மா 5-ஆவது இடத்தில் இருக்க, மேற்கிந்தியத் தீவுகளின் ஹேலி மேத்யூஸ் முதலிடம் வகிக்கிறாா்.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.