Crime, law and justice
பத்திர எழுத்தரை காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு ஒத்திவைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான பத்திர எழுத்தரை மீண்டும் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய சி.பி.சி.ஐ.டி., மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்தது.
பழநி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் 48, ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ் 38, உட்பட 6 பேரை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து ஜஸ்டின் மணிகண்டன், ஜெயப்பிரகாைஷ ஒருநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.
இதில் வழக்கு தொடர்பான சந்தேகங்களுக்கு போதுமான பதில்கள் கிடைக்கவில்லை. எனவே ஜெயப்பிரகாசிடம் விசாரிக்க கூடுதல் அவகாசம் வேண்டும். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பதம்பநாபன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயப்பிரகாஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவச்சந்திரன் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நாளை (செப்.,19) ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயப்பிரகாஷ் மீண்டும் மதுரை சிறைக்கு அழைத்துச்செல்லபட்டார்.