Politics
'தவெகவின் டைவர்சன் பாலிடிக்ஸ்... அமைச்சரும் அதைத்தான் செய்கிறார்'-எ.வ.வேலு குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவைச் செயலாளரை சந்தித்த பின் திமுக கொறடா எ.வ.வேலு மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். எ.வ.வேலு பேசுகையில், ''உரிமை மீறல் மனு கொடுத்து விட்டோம். சட்டப்பேரவையின் கடைசி நாள் தான் அந்த குழுவை அமைத்தார்கள். பேசித்தான் முடிவெடுப்பார்கள். இந்த கமிட்டிக்கு எப்பொழுதுமே டெபுட்டி ஸ்பீக்கர் தான் தலைவராக போடுவார்கள். இந்த குழு எடுக்கும் முடிவை சபாநாயகரிடம் கொண்டு போய் கொடுப்பார்கள். பின்னர் சபாநாயகர் தான் என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து சொல்லுவார்.
சட்டமன்றத்தில் இல்லாதவர்களை பற்றி சட்டமன்றத்தில் பேசுவது என்பது தவறு. விதி அப்படித்தான் இருக்கிறது. சட்டமன்றத்தில் இருப்பவர்களை பற்றி பேச வேண்டும் என்று சொன்னால் பதில் சொல்ல முடியும். இல்லாதவர்களை பற்றி பேசும்பொழுது அது விதிக்கு மீறிய விஷயம். சட்டமன்றத்தில் இருப்பவர்களை பற்றி பேச வேண்டும் என்றால் அதைப் பற்றிய குறிப்பு பேரவைத் தலைவர் கொடுக்க வேண்டும். அதன் காப்பியை சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் தான் நம் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்கிறார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டும் என பதில் சொல்ல முடியும்.
சட்டமன்ற உறுப்பினரை பற்றி பேச வேண்டும் என்று சொன்னாலும், குற்றச்சாட்டு சொன்னாலும் சம்பந்தப்பட்ட தகவலை உறுப்பினரிடம் கொடுத்துவிட்டு தான் அவர்கள் சொல்ல வேண்டும். சட்டமன்றத்தில் இல்லாத உறுப்பினர்களை பொறுத்த அளவிற்கு சட்டமன்றத்தில் பேசுகின்ற விதியே அல்ல. பேசவும் முடியாது. இப்படி இல்லாதவர்களை பற்றி எப்பொழுது பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி மின்துறை அமைச்சர் பேசியது குறித்து தான் தற்போது மனு கொடுத்துள்ளோம். பேரவை தலைவரே சொன்னார் இந்த மாமன்றத்தில் சர்க்காரியா கமிஷன் பற்றி ஏற்கனவே பலமுறை விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இதைப் பற்றி மீண்டும் விவாதிப்பது தேவையில்லாதது என்பதுதான் அவருடைய பார்வை.
ஆனால் அதையும் மீறி அமைச்சர்கள் திரும்பத் திரும்ப பேசுகிறார்கள். அதை பேச வேண்டிய அவசியமே இல்லை. காலத்தையும் நேரத்தையும் விரயம் செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் நாங்கள் மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு மக்களுடைய தேவைகளை கேள்விகளாக வைக்க முடியும். அதற்கு நேரடியாக பதில் சொல்வதை தவிர்த்து விட்டு டைவர்ஷன் பாலிடிக்ஸ் செய்கிறார்கள். இதை விட்டுவிட்டு வேறு ஒரு சம்பந்தம் இல்லாத விஷயத்தைப் பற்றி பேசி, அதை பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிருக்கும் நிலையை சட்டமன்றத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சரவை என்பது பொதுவாக சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கேட்டால் அதற்குரிய பதிலை சொல்வதை விட்டு டைவர்ஷன் பாலிடிக்ஸ், இல்லாதது, பொல்லாதது, பழைய செய்திகள் எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கும் செயல்களில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீதித்துறை அமைச்சரும் அதை தான் செய்கிறார்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)