Arts, culture, entertainment and media
படிப்பறை: ஸ்ட்ராபெரி மூன் - ஜீவகரிகாலன்

பொதுவாக ஜீவ கரிகாலனின் முந்தைய தொகுப்பின் கதைகளில் நகைச்சுவை பரவிக்கிடக்கும். ஆனால் இந்தத் தொகுப்பு மிகவும் மாறுபட்ட ஒன்றாக மலர்ந்திருக்கிறது.
சென்னை - 600 017.
தூக்கம் மனித வாழ்வின் பாதி அங்கம். தூக்கம் குறைந்தால் அது பல்வேறு பிரச்னைகளுக்குத் தொடக்கமாகிவிடும். அதை ‘இன்சோம்னியா டிஸ்ஆர்டர்’ என்கிறது மருத்துவ உலகம். இன்சோம்னியாவால் பாதிக்கப்பட்டவர்களின் உலகம் குறித்த கதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது ‘ஸ்ட்ராபெரி மூன். இதன் ஆசிரியர் ஜீவ கரிகாலன். மிகவும் சுவாரஸ்யமான பல விசித்திரமான கதைகள் இந்த நூலில் உள்ளன.
இந்தத் தொகுப்பின் கதைகள் அனைத்தும் ஒரு விளையாட்டுபோலத் தோன்றுகின்றன. அதுவும் வாசகனையும் சேர்த்துக்கொண்டு விளையாடும் விளையாட்டு. இதில் அவரவர் அவரவர் ஈடுபாட்டுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றும் வசதியும் உண்டு. உதாரணமாக, `---------- குறித்து --------- இடம் அர்விந்த் சொன்ன கதை' என்னும் சிறிய கதையைச் சொல்லலாம். கதையில் ஆங்காங்கே கோடிட்ட இடங்கள் தரப்பட்டிருக்கின்றன. இதுவரை நாம் வாசித்த, கேட்ட கதைகளின் புரிதலோடு நாம் அவற்றை நிரப்பியபடியே வாசிக்க நேர்கிறது. உண்மையில், நம்மையும் அறியாமல் நமக்கு அறிமுகமான வார்த்தைகளை, சம்பவங்களை, பெயர்களை நாம் வாசித்துக் கடப்பது ஒரு விளையாட்டுதான்.
குறைவாகத் தூங்கும் நேரத்தில் வரும் கனவுகளின் அலைக்கழிப்புகள் பற்றிப் பேசும் கதைகள் பல இத்தொகுப்பில் இருக்கின்றன. அவற்றில், ‘ரட்சகன்' கதை மிகவும் சுவாரஸ்யமானது. சிறுவயதில் கிணற்றில் பார்த்த ஆமை குறித்த அச்சம் பற்றிய கதை இது. ஆமைகள் ஏதோ ஒருவகையில் அவன் வாழ்க்கையோடு தொடர்ந்து வந்து அச்சமூட்டிக் கொண்டேயிருக்கின்றன. அதிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும்போது, விபத்து ஒன்றில் ஒரு ஆமையை தன் வாகனத்தால் ஏற்றிக் கொன்றுவிடுகிறான் கதைசொல்லி. அதை அவன் விவரிக்கும்போது கேட்கும் நண்பர், ‘ஜீ ஒண்ணேயொண்ணு சொல்றேன். அந்த ஆமை நினைச்சிருந்தா ஓட்டுக்குள்ள தன் தலையை எடுத்திருக்கலாம். ஆனா அதெ செய்யலை. ஏன் தெரியுமா?' என்று கேட்டு பதில் சொல்லும்போது கதை வேறு தளத்துக்கு நகர்கிறது. அதுவரை சொல்லப்பட்ட கதையின் சாயல் மாறுகிறது.
ஆங்காங்கே பளிச்சென்ற சில வரிகள் வாசிப்பை சுவாரஸ்யப் படுத்துகின்றன. உதாரணமாக, பௌர்ணமி இரவின் வானத்தைப் பார்க்கும்போது, ‘கண்களைத் திறந்து வானத்தைப் பார்த்தேன். அது நான் சந்தித்திடாத புதிய இருள்' போன்ற வரிகள் வாசிப்பை அழகாக்குகின்றன.
பொதுவாக ஜீவ கரிகாலனின் முந்தைய தொகுப்பின் கதைகளில் நகைச்சுவை பரவிக்கிடக்கும். ஆனால் இந்தத் தொகுப்பு மிகவும் மாறுபட்ட ஒன்றாக மலர்ந்திருக்கிறது. தமிழ்ச் சிறுகதைகள் மாறுபட்ட கதைக்களங்களை நோக்கி நகர்வதன் அடையாளமாக இந்த ‘ஸ்ட்ராபெரி மூனை’ சொல்லலாம்.
