Sport
பேட்மின்டன்: மதுரை பள்ளி அணி ஆதிக்கம்
சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான பால் பேட்மின்டன் போட்டியில், ‘சூப்பர் லீக்’ சுற்றில், மதுரை பள்ளி அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியது.
எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரியின் 28ம் ஆண்டு நிறுவன நாள் கோப்பைக்கான அகில இந்திய அளவிலான பள்ளி மாணவியர் பால் பேட்மின்டன் போட்டி, காட்டாங்கொளத்துாரில் நடக்கிறது.
நேற்றைய சூப்பர் லீக் சுற்று ஆட்டங்களில் மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளி அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து அசத்தியது.
முதல் போட்டியில், சென்னை சி.எஸ்.ஐ., ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் பள்ளி அணி, 35 – 32, 35 – 25 என்ற நேர் செட் கணக்கில், விழுப்புரம் வைக்காப் மேல்நிலை பள்ளி அணியை வீழ்த்தியது.
இரண்டாவது போட்டியில், மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளி அணி, சேலம் ஏலம்பிள்ளை அரசு மகளிர் அணியுடன் கடும் போராட்டத்தை சந்தித்தது.
முதல் செட்டை 26 – 35 என இழந்தாலும், அடுத்த இரு செட்களிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மதுரை அணி, 35 – 26, 35 – 23 என வெற்றி பெற்றது.
மூன்றாவது போட்டியில், விழுப்புரம் வைக்காப் பள்ளி அணியை எதிர்கொண்ட மதுரை ஓ.சி.பி.எம்., அணி, 35 – 21, 35 – 23 என எளிதில் வென்று, சூப்பர் லீக்கில் தன் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
சென்னை சி.எஸ்.ஐ., ஜெஸ்ஸி மோசஸ் பள்ளி, சேலம் ஏலம்பிள்ளை அரசு மகளிர் பள்ளி அணிகள் மோதிய நான்காவது ஆட்டம், கடைசி வரை பரபரப்பாக இருந்தது.
முதல் செட்டை சென்னை அணி 35 – 27 என கைப்பற்றியது. ஆனால் விடாமல் போராடிய சேலம் அணி, அடுத்த இரு செட்களையும் 35 – 33, 35 – 33 என கைப்பற்றி த்ரில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.