தீப்பிடித்து எரிந்த அரசு பஸ் 50 பயணிகள் உயிர் தப்பினர்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ., காலனி ரயில்வே கேட் அருகே அரசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த 50 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று காலை 10:00 மணிக்கு திருநெல்வேலி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. டிரைவர் சாமிநாதன் ஓட்டினார். கண்டக்டர் முருகன், 50 பயணிகள் இருந்தனர்.
சங்கரன்கோவில் என்.ஜி.ஓ., காலனி ரயில்வே கேட் அருகே சென்றபோது பஸ்சின் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதை கவனித்த டிரைவர், கண்டக்டர் உடனடியாக பஸ்சை நிறுத்தி பயணிகள் அனைவரையும் கீழே இறக்கினர். சிறிது நேரத்தில் இன்ஜின் பகுதியில் பற்றிய தீ, பஸ் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. சங்கரன்கோவில் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர்.