ஆடிட்டர் வீட்டில் ரூ.1.90 கோடி வெள்ளி பொருட்கள் கொள்ளை
கோவை: கோவையில், ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து, 75 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.
கோவை ஒப்பணக்கார வீதியில் வசிப்பவர் சேஷகிரி, 57, ஆடிட்டர். கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தன் மகன் வீட்டிற்கு சென்று, ஒரு மாதம் தங்கியிருந்தார். நேற்று, அவர் கோவை திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு, உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 75 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தன. அதன் மதிப்பு, 1.90 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
வெரைட்டி ஹால் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.
மக்கள் நெருக்கம் அதிகம் நிறைந்த ஒப்பணக்கார வீதியில், வீட்டின் பூட்டை உடைத்து, 75 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.