Lifestyle and human interest
தெருநாய்களால் விபத்து அதிகரிப்பு: நோயால் மனிதர்கள் பாதிக்கும் அபாயம்
தேனி:மாவட்டத்தில் தெருநாய்களால் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பாதித்த தெருநாய்களில் இருந்து உதிரும் முடியால் மனிதர்கள் பாதிக்கும் அபாயமும் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. பல இடங்களில் கூட்டமாகவும், தனியாகவும் சுற்றி திரிகின்றன. குறிப்பாக கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் உள்ள பகுதிகளில் இவை அதிகம் உள்ளன. இரவில் அவ்வழியாக டூவீலர்கள், நடந்து செல்பவர்களை தெருநாய்கள் விரட்டுவது அதிகரித்துள்ளது. இதில் பலர் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். சிலர் உயிர்பலியாகும் சம்பவங்களும் நிகழ்கின்றன. சுற்றித்திரியும் தெருநாய்களில் பல தோல் நோய் பாதிப்பால் முடிஉதிர்ந்த நிலையில் சுற்றுகின்றன. அந்த முடிகள் வழியாக தோலில் இருந்து உதிரும் புழுக்களால் மனிதர்கள் பாதிக்கும் அபாயமும் உள்ளது. இதனை தடுக்கவும், தெருநாய்களை கட்டுப்படுத்தவும் உள்ளாட்சி அமைப்புகள், கால்நடை பராமரிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.