தேனி ஒன்றிய அலுவலக கட்டடத்திற்கு சிறப்பு அனுமதி பெற புதிய முயற்சி :உரிய அனுமதியின்றி கட்டியதால் சிக்கல்
தேனி:தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை உரிய அனுமதி இன்றி கட்டியதால் கூடுதல் மின் கட்டணம் கட்டணம் செலுத்துகின்றனர்.
தேனியில் பெரியகுளம் ரோட்டில் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரூ.3.12 கோடி செலவில் லிப்ட் வசதியுடன் கட்டப்பட்டு 2024 ஜூலையில் திறக்கப்பட்டது. இந்த கட்டடத்திற்கு உரிய கட்டுமான அனுமதி பெறாததால் இதுவரை அலுவலக பயன்பாட்டிற்கான டேரிப் 5 மின் இணைப்பு பெறவில்லை. கட்டுமான பணிகளுக்கு வழங்கப்பட்ட டேரிப் 6ல் வழங்கிய மின் இணைப்பையே இரு ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இரு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.60 ஆயிரத்திற்கும் மேல் மின்கட்டணம் செலுத்தும் நிலை தொடர்கிறது. 'சேப்டி' சான்றிதழ் பெறாததால் 'லிப்ட்' இரு ஆண்டுகளாக காட்சி பொருளாக உள்ளது.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ' ஏற்கனவே மாவட்ட நகரமைப்பு துறையில் கட்டட அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், கட்டடத்தின் சுற்றுபகுதிகளில் தீயணைப்பு வாகனம் சென்று வரும் வகையில் பாதை வசதி இல்லாததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. கட்டட அனுமதி சான்று இல்லாததால் 'சேப்டி' சான்றிதழ் பெற முடியவில்லை. ஊராட்சி ஒன்றிய கட்டடத்திற்கு சிறப்பு கட்டுமான அனுமதி வழங்க கோரி கலெக்டர் மூலம் நகரமைப்பு துறை தலைமை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளோம்,' என்றனர்.