மாயார் ஆற்றில் குறைந்து வரும் நீர்வரத்து விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
கூடலுார்: முதுமலை மாயார் ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதால் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
முதுமலை, புலி, யானை, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. விலங்குகளின் குடிநீர் தேவையை, மாயாறு ஆறு, ஓம்பட்டா, கேம்பட்டா உள்ளிட்ட தடுப்பணைகள் பூர்த்தி செய்து வருகின்றன. இங்கு ஜூன் மாதம் துவங்கும் பருவமழை அக்., நவ., வரை தொடரும். பிப்., வரை வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு இருக்காது.
கோடை வறட்சியின் போது, வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் மாயார் ஆற்றிலிருந்து வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று, வனப்பகுதிகளில் உள்ள சிமெண்ட் தொட்டிகளை ஊற்றி வருவது வழக்கம்.
ஆனால், நடப்பாண்டு பருவமழை எதிர்பார்த்ததை விட, மிகவும் குறைவாகவே பெய்துள்ளது. இதனால், வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் மாயார் ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் கோடையில், நீர்வரத்து மேலும் குறைந்து வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
முதுமலை துணை இயக்குனர் வித்யாதர் கூகைகயில்,‘‘முதுமலை மாயார் ஆறு மற்றும் நீர் நிலைகளில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவில் தண்ணீர் உள்ளது. இப்போதைக்கு குடிநீர் பிரச்னை இல்லை. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் ஊற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.