வறட்சியால் தரிசாக விளை நிலங்கள்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால், மானாவாரி சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால், அறுவடை செய்ய முடியாமல் பயிர்களை கால்நடைகளுக்கு மேய்ச்சலாக விட்டுள்ள பரிதாப நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், கருவலுார், குன்னத்துார் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் கோபி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழையை நம்பியே இச்சாகுபடி நடைபெறும். இந்தாண்டு மழை போதிய அளவு பெய்யாததால், சாகுபடி பரப்பு பாதியாக குறைந்துள்ளது. போத்தம்பாளையம், ராயம்பாளையம், வடுகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் பாதிப்பு அதிகமாக உள்ளது.
'கூலி கூட தேறாது' நிலக்கடலை விவசாயி மூர்த்தி கூறுகையில், “சித்திரையில் விதைத்து, ஆவணி கடைசி அல்லது புரட்டாசியில் அறுவடை செய்ய வேண்டும். தற்போது பயிர்கள் கருகிவிட்டதால், ஆட்களை வைத்து பிடுங்கினால் கூலிக்குக்கூட தேறாது. இதனால், பலர் பயிர்களை பிடுங்காமல் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு விட்டுள்ளோம். வறட்சியால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், மதிப்புக்கூட்டப்பட்ட தொழில்களும் பாதிக்கப்படும். வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.
இடுவாய் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் கூறுகையில், “பொதுவாக இப்பகுதியில் சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்களை சாகுபடி செய்வோம். இந்தாண்டு பருவமழை பொய்த்துவிட்டதால், நிலங்களில் சாகுபடி செய்யாமல் அப்படியே விட்டுள்ளோம்” என்றனர்.